பிணவறையில் பிணம் அறுக்கும் (பிரேதப் பரிசோதனை) தொழிலாளர்களோடு பயணம் செய்து அவர்களது வாழ்க்கையையும் அவர்கள் செய்யும் பணியையும் புகைப்படமாக ஆவணப்படுத்தி இருக்கிறார்,புகைப்படக்கலைஞர் அருண் விஜய் மாதவன்.
இவர் படித்து வளர்ந்தது எல்லாமே நாகர்கோவில்தான். அப்பா அரசு போக்குவரத்துத்துறையில் வேலை செய்கிறார். தனது உயர்கல்விக்காக அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனில் புகைப்படத்துறையை தேர்தெடுத்துப் படித்தார். தனது இறுதி ஆண்டு படிப்பிற்கான ப்ராஜெக்ட்டாக பிணவறையில் துப்புரவுத் தொழிலாளர்களின் அன்றாடப் பணியைப் பதிவு செய்ய விரும்பினார். அந்த புகைப்படங்கள் ''புத்தாயிரம் வருட ஒடுக்குமுறை'' (Millenia of Oppression) என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன. இவை சர்வதேச கவனம் பெற்றுள்ளன. சினிமாவில் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட உடலைக் காண்பிக்கும்போது ஒருவரின் காலைதான் காட்டுவார்கள் ஆனால் அருண் புகைப்படங்களை பார்க்கும்போது அந்த வழக்கமான தோற்றத்தை மாற்றியிருக்கிறார். இந்தப் புகைப்படங்களை எடுத்தது அவருக்கு உளவியல் சிக்கல்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது பற்றி அவரிடம் பேசினோம்.
‘நான் குஜராத்தில் படிக்கும்போது இந்த வேலையைச் செய்வதற்காக நவ்சர்ஜன் (Navsarjan) தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை அணுகினேன். அவர்கள்தான் அமரர் விடுதியைப் புகைப்படம் எடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். அதற்காக இந்த வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வசிக்கும் 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று கள ஆய்வு செய்தேன். எனக்கும் முதலில் என்ன படங்கள் எடுக்கவேண்டும் என்றும் தெரியவில்லை. ஏனென்றால், அந்த அறைக்குள் நடப்பவற்றைப் படங்கள் எடுக்கக்கூடாது என்று மருத்துவர் கறாராகச் சொல்லியிருந்தார். அதனால் நான் பிணவறைக்கு வெளியே நின்று கொண்டும், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தும் படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் குஜராத்தில் ஆனந்த் நகர் அருகே ஓரிடத்தில் பிணவறையின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, ‘உள்ளே வா!'' என்று ஒரு தொழிலாளி கூப்பிட்டார் அப்போது பிணவறையில் எந்த உடலும் இல்லை.. அந்த அறையில் மொத்தம் 3 பேர் இருந்தனர். ஏசி ஒடுகிற சத்தம் மட்டும் உர்ர் என்று கேட்டுக்கொண்டு இருந்தது. நான் அவரைப் பார்த்தேன்.
‘இதுதான் மேஜை. இந்த மேஜையில் வைத்துதான் நாங்கள் உடல்களை அறுப்போம். இந்த ஆயுதங்களைத்தான் நாங்கள் உடல்களை அறுக்கப் பயன்படுத்துவோம். சில நேரங்களில் ஒரே நேரத்தில் எட்டு உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வோம்,'' என்று ஒவ்வொன்றாக எனக்குச் சொன்னார். பிறகு ஒரு உடம்பை பொம்மை மாதிரி வரைந்து தீக்குளித்து இறந்தால் அவர்களை எப்படி அறுப்பது, தண்ணீருக்குள் முழ்கி அழுகி இறந்தால் அந்த உடலை எப்படிக் கையாளவது, சாதாரணமாக நோய் வந்து இறந்தால் எப்படிச் செய்வது, கொள்ளைநோய் வந்து இறந்த உடல்களை எவ்வாறு பாதுகாப்பாக மேற்கொள்ளுவது, அதற்காக என்னென்ன ஆயுதங்களைப் பயன்படுத்துவது என்று எனக்கு விளக்கினார். ‘நாங்க தினமும் நிறைய நிர்வாண உடல்களைப் பார்க்கிறோம் .அதுபோக நாங்கதான் உடல்களை அறுக்கிறோம். அதனால் நாங்கள் எங்கள் தொழிலுக்கு மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு மந்திரத்தைச் சொல்லி கிழக்குப்பார்த்து நின்று படங்களுக்கு பூசை செய்வோம். ஒரு உடலை அறுப்பதற்கு முன்னால் நாங்கள் இப்படிச் செய்துவிட்டுதான் எங்கள் ஆயுதத்தைக் கையில் எடுப்போம், அப்பதான் எங்களை பேய் தாக்காது. நோயும் அண்டாது,‘ என்றார். அதைக் கேட்கும்போது எனக்கு ஒருவித அலட்சியமான சிரிப்புதான் வந்தது. அவர்களின் மணிக்கட்டில் விதவிதமான வண்ணங்களில் நிறைய கோவில் கயிறுகளைக் கட்டியிருந்தார்கள். திடீரென்று ஒரு டாக்டர் வந்தார். ‘தம்பி இப்போ ஒரு உடம்பைக் கொண்டு வர்றாங்க, நீ போட்டோவெல்லாம் எடுக்ககூடாது. பார்க்க மட்டும் செய்யலாம்'' என்றார். நானும் சரி என்று தலையை ஆட்டி முடிப்பதற்குள் ஒரு உடலைக் கொண்டு வந்தார்கள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அந்தமாதிரியான ஒருவித நாற்றத்தை என் வாழ்க்கையில் நான் எங்கேயும் முகர்ந்தது இல்லை. அழுகிய பெண் உடல். 35 அல்லது 40 வயது இருக்கும். அது ஒரு மனித உடல் மாதிரியே தெரியவில்லை. கை கால் எல்லாம் மடங்கி இருந்தது. தண்ணீருக்குள் அழுகி நான்கு நாட்களுக்கு மேலிருக்கும் என்று நினைக்கிறேன். கண் முட்டைமாதிரி வெளியே துருத்திக்கொடும். உதடுகள் பிளந்தும் வயிறு உப்பியும் இருந்தது. அந்த நாற்றம் தாளாமல் வெளியே ஓடிவந்துவிட்டேன். அவர்கள் என்னை அமைதியாகப் பார்த்துவிட்டு அறுக்கத் தொடங்கினர்.
நான் என் அறைக்கு வண்டியில் வந்துகொண்டு இருக்கும்போதும் அந்த நாற்றம் என்னை துரத்திக் கொண்டே வந்தது. அந்த உருவம் என் கூடவே வருவதுபோலவும் இருந்தது. எனக்கு உண்மையிலே பயம் வந்துவிட்டது. உடனே வண்டியை ஓரமாக நிறுத்தி, சிகரெட்டைப் பற்றவைத்து புகையை என் முகம் கைகால் உடம்பெல்லாம் ஊதிவிட்டேன். அப்படியும் அந்த நாற்றம் போகவில்லை. மறுநாளும் நான் உடுத்தியிருந்த துணியைப் பார்க்கும்போது எனக்கு அந்த ஞாபகம்தான் வந்தது. அதனால் அந்தத் துணியைத் தூரத் தூக்கிப் போட்டுவிட்டேன்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு மூன்றுநாட்கள் நான் எங்கேயும் போகவில்லை. நமக்கு இந்த ப்ராஜெக்ட் சரிப்பட்டுவராது, வேறு ஐடியா யோசிக்கலாம் என்று முடிவு எடுத்திருந்தேன். ஆனால் உள்மனம் அங்கே போவதற்கு விருப்பப்பட்டதால்,‘ இன்றைக்கு ஏதாவது போஸ்ட்மார்ட்டம் இருக்கிறதா?‘ என்று போன் பண்ணிக் கேட்டேன் அவர்கள் 'வா' என்றனர். நான் அங்கே போனபோது, சாதாரணமாக ஒரு ஆள் படுத்திருப்பதுபோல்தான் ஒருவரை அந்த மேஜையின் மேல் கிடத்தியிருந்தனர். அதைப்பார்த்தவுடன் எனக்கு பயம் போய் விட்டது போல் தோன்றியது.
நான் தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட இறந்த உடல்களைப் பிரேத ப்பரிசோதனை நடந்ததைப் பார்த்தபிறகுதான் நான் அவர்களைப்போல் சாதாரணமாக இருக்கமுடிந்தது. அதற்கு அப்புறம் நான் சென்னை வந்துவிட்டேன். இங்கேதான் நான் பிணவறைப் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.
முதலில் எதை எடுக்கவேண்டும், எதை எடுக்கக்கூடாது என்ற குழப்பம் இருந்தது. போஸ்ட்மார்ட்டம் நடக்கையில் படம் எடுத்துக் கொண்டு இருப்பேன். திடீரென்று அருவெறுப்பு ஏற்படும். முகத்தை கேமராவிலிருந்து எடுத்துவிடுவேன். சிலநேரம் அந்தமாதிரி செய்யும்போது ஒரு நல்ல படம் தவறிவிடும்.. அப்படித் தான் ஒருநாள், கழுத்தில் இருந்து வயிறு வரை அறுக்கும்போது 50mm லென்ஸ் வைத்து படம் எடுப்பதற்காகக் காத்திருந்தேன். அறுக்க ஆரம்பிக்கும்போது படம் எடுக்க தயாராக இருந்தேன். திடீரென்று அந்த உடல் எழுந்து கேமரா வழியாக என்னை பார்த்தது. நான் பயந்து விட்டேன். அப்புறம் பார்த்தால், இன்னொருத்தர் அதன் தலையைத் தூக்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த பிறகுதான் உயிரே வந்தது.
நான் 500க்கும் மேற்பட்ட பரிசோதனைகளைப் பார்த்திருக்கிறேன். அதுவும் தீயில் எரிந்த உடல்களை அதிகமாகப் பார்த்ததால் என் மனதை அது அதிகமாக பாதித்தது. அன்றைய பொழுது என்னவோ மாதிரி மனசைப் பிசையும். அதனால் எனக்கு சிகரெட் குடிக்கும் பழக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. பிணவறையை விட்டு வெளியே வந்தபிறகு ஒரு சிகரெட், வீட்டுக்குப் போனவுடன் ஒரு சிகரெட். குளிப்பதற்கு முன் ஒன்று, குளித்த பிறகு இன்னொன்று. மொட்டைமாடிக்குப் போய் துணியைக் காயப்போட போகும்போது, போட்ட பிறகு இன்னொன்று.. என சிகரெட் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. இந்த ப்ராஜெக்ட் ஆரம்பித்த பிறகு நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன் என்று நினைக்கிறேன். அது எனக்கு முதலில் தெரியவில்லை. எனக்குள் எப்போதுமே யாருடைய உருவமாவது என் பின்னால் இருப்பது மாதிரியே உணர்வேன். இதனால் எனக்கு பயமெல்லாம் கிடையாது. இருந்தாலும் ஏதோ ஒரு மனசங்கடம் இருந்துகொண்டே இருந்தது. அதை வார்த்தையால் சொல்லத் தெரியவில்லை. திடீரென்று நடுஇரவில் விழித்துவிடுவேன். அப்போது ரொம்ப உற்சாகமாக உணர்வேன். பக்கத்தில் பார்த்தால் நண்பர்கள் தூங்கிக்கொண்டு இருப்பார்கள்.
ஒருநாள் அப்பாவும் பையனும் வண்டியில் போகும்போது நின்ற லாரியில் மோதி விபத்தில் இறந்துவிட்டனர். பையனுக்கு 6 வயது. அவர்கள் இரண்டு பேருடைய உடல்களும் மேஜையில் கிடத்தியிருந்தார்கள். அந்தப் பையனின் பிரேத பரிசோதனை நடப்பதை பார்க்க எனக்கு விருப்பமே இல்லை. அங்கே என்னால் புகைப்படமும் எடுக்கமுடியவில்லை. திரும்ப திரும்ப அந்தச் சிறுவனின் உடல் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதனால் நான் அன்று தனியாக குடிக்க ஆரம்பித்தேன். இப்போது வரைக்கும் அந்த பையனின் மிக மோசமாகச் சிதைந்த உடல் என் கண்ணுக்குள்ளேயே உள்ளது.
ஒருமுறை, தூக்குப் போட்டு இறந்துபோன இரண்டு பெண் உடல்களையும் ஒரேநேரத்தில் பிணவறையில் பார்த்தேன். ஆடைகள் இல்லாத உடல்கள். எனக்குப் பார்ப்பதற்குக் கூச்சமாகத்தான் இருந்தது. அந்த உடல்களையும் அறுத்தார்கள். அதையும் பார்த்தேன் என்னுடைய மனதில் இருந்த கற்பனையெல்லாம் சுக்குநூறாக உடைந்துவிட்டது. என்னுடைய தோழி வந்தபோதும் நான் அவளிடமும் சரியாகப் பேசாமல் தான் இருந்தேன். அதுபோக பிணவறைக்கு நான் எப்போது போனாலும் ஆணோ பெண்ணோ நிர்வாணமாகக் கிடந்தார்கள். அந்தக் கோலத்தில் நான் தொடர்ந்து பார்த்து வந்ததால், என்னால் யாரையுமே சாதாரணமாகப் பார்க்க முடியவில்லை. இதனால் எனக்கு பயம் அதிகமாயிற்று. ஒருநாள் என்னுடைய தோழி என்னோடு நெருங்கி வந்து பழகியபோது என்னால் நெருக்கமாகச் செல்லமுடியவில்லை. இதனால் அவளுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு கொஞ்சநாள்கள் பேசாமலே இருந்தோம்.
இதற்கிடையில் என்னுடைய அன்றாடப் பழக்கவழக்கங்களும் மாற ஆரம்பித்தன. என்னுடைய நெஞ்சு படப்படப்பு அடிக்கடி எனக்கே கேட்க ஆரம்பித்தது. என்னுடைய குணமே மாறிற்று. என்னுடைய தோழி வந்தால் அவளை எங்கேயாவது கூட்டிப் போவதற்கு விரும்பமில்லாமல் போயிற்று. தேவையில்லாத பயமும் அதிகமாயிற்று. பைக் எடுத்துட்டு வெளியே போவேன். ஆனால் அந்தநேரத்தில் மழை வந்துவிட்டால் இடி நம் தலை மேல் விழுந்து விடும் என்று யோசித்து, வெளியே போவதும் கிடையாது. இரவில் மொட்டைமாடியில் நிற்கும்போது இருட்டில் எங்கேயாவது பாம்பு இருக்குமோ என்ற எண்ணம் தோன்றும். இப்படி தேவையில்லாத பயம் கூடி விட்டது. நான்கு பேர் மத்தியில் பேசினாலே என் கைகால் எல்லாம் உதறும்.
இதனால் மருத்துவமனைக்குப் போனபோது டாக்டர் கொஞ்சநாள் ஓய்வில் இருக்க சொல்லியிருக்கிறார். நான் இப்போது கேமராவை கையில் எடுத்து ஒரு வருடம் ஆகிறது,'' என்கிறார், அருண்மாதவன்.
இவரது படங்கள் அமெரிக்க போட்டோ பெஸ்ட் நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டன. சென்னையில் சமீபத்தில் நடந்த சென்னை போட்டோ பினாலே (Chennai Photo Binnale) நிகழ்ச்சியில் இந்தப் படங்கள் காட்சிப்படுத்தப் படுத்தப்பட்டு பெரும் கவனத்தைப் பெற்றன.
ஏப்ரல், 2019.